Monday 24 October, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (1)

திருப்பரங்குன்றம் கோவில் (பட உதவி : tamilnow.com)

திருவண்ணாமலை சில அரிய தகவல்கள் பாகம் 1 ல் அத்தலத்தை பற்றி பாடிய அருளாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சுந்தரமுர்த்தி நாயனார் திருவண்ணாமலையாரை பாடிய சில பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு ஒரு சகோதரர் அவர் திருவண்ணாமலைக்கு  வந்ததாகவோ அத்தலத்தை பற்றி பாடல் பாடியதாகவோ ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார். 

கரும்பு தின்ன கூலியா வேண்டும் ? வன்தொண்டர் நம்பியாரூரர் பாடல்களை படித்து படித்து தேடி தேடி இதோ அவர் அண்ணாமலையாரைக் குறித்து பல தலங்களில் பாடிய பாடல்கள், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

63 நாயன்மார்களிலே எனக்கு சுந்தரமுர்த்தி நாயனார் மீது ஒரு தனி பாசம் உண்டு. அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதால் மட்டுமல்ல, அவர் இறைவனிடம் கொண்டிருந்த உரிமையான நட்பின் மேல் ஒரு சின்ன பொறாமையே எனக்கு உண்டு. அவர் பாடிய பாடல்களில் உரிமையான கோபமும், பொருள் தேவைப்படும் போது நீ தானே கொடுக்க வேண்டும் என்ற முறையீடும், அவருக்காக இறைவன் ஒவ்வொன்றும் செய்யும் போது பெருமிதமும், இறைவனுக்கே "நண்பேன் டா" என்ற அதிகாரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். 

சுந்தரமுர்த்தி நாயனார் பல பாடல்களில் அண்ணாமலையாரை அழைத்திருக்கிறார். அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு. 

திருப்பரங்குன்றம்:

சுந்தரமுர்த்தி நாயனார் பாடல்களில் ஒரு தலத்தில் இறைவனை பாடும் போது பல தலங்களை குறித்து அவைகளை வைப்பு தலங்களாக வைத்து பாடுவது சகஜம். திருபரங்குன்றத்திலும் அப்படி தான் பாடுகிறார்.

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன; 

பல்-நால்மறை பாடுதிர்; பாசூர் உளீர்; படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்; 

பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர்; படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்; 

அண்ணாமலையேன்என்றீர்; ஆரூர் உளீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே 

இப்பாடலில் அவர் தென்னா தென் தெத்தேனா என்று பாடும் பூதங்கள் பல திசைகளில் உள்ளன, நீரோ நான்கு வேதங்களை பாடுகின்றீர், திருபாசூரில் இருக்கின்றீர், படம்பக்கம் என்னும் பறை கொட்டும் திரு ஒற்றியூரில் இருக்கின்றீர், பண் போன்ற மொழியினை பேசும் உமை அம்மையை ஒரு பாகத்தில் வைத்துள்ளீர். எனினும் புறங்காட்டு பற்று ஒழியீர். அண்ணா மலையேன் என்றீர், திருவாரூரில் உள்ளீர், அடியேன் உமக்கு ஆட்பட்டு பணி செய்ய அஞ்சுவோம் என்று பாடும் போது , திருப்பரங்குன்றத்தில் திருவண்ணாமலையானை குறிப்பிடுகிறார்.

அடுத்தது எங்கே.....காத்திருங்கள் !!!